லீசெஸ்டர்சையர் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சாதனையுடன் கூடிய வெற்றியை பதிவுசெய்துள்ளது.
நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் 481 ஓட்டங்களை குவித்து இங்கிலாந்து அணி சாதனைப்படைத்திருந்தது.
இந்த சாதனையை பற்றிய பேச்சு ஒருபக்கம் சென்றுக்கொண்டிருக்கையில், இளம் வீரர்களை கொண்ட இந்திய ஏ அணி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் பெறப்பட்ட மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணி்க்கையை விளாசியுள்ளது.
லீசெஸ்டர்சையர் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில்,4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 458 ஓட்டங்களை விளாசித் தள்ளியது.
இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ப்ரீதிவி ஷோவ் மற்றும் மயங்க் அகர்வால் ஜோடி ஆரம்ப விக்கட்டுக்காக 221 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், மயங்க் அகரவ்வால் ரிட்டேயர் ஹேர்ட்ஸ் மூலமாக வெளியேறினார்.
அதிரடியாக ஆடிய மயங்க் அகர்வால் 106 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கலாக 151 ஓட்டங்களையும், ப்ரீதிவி ஷோவ் 92 பந்துகளுக்கு முகங்கொடுத்து, 3 சிக்ஸர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கலாக 132 ஓட்டங்களை குவித்தார்.
அடுத்து களமிறங்கிய சுப்மான் கில் 54 பந்துகளுக்கு 86 ஓட்டங்களையும், தீபக் ஹுடா 25 பந்துகளுக்கு 38 ஓட்டங்களையும் விளாச, மறுபக்கம் சிரேயாஷ் ஐயர் 15 ஓட்டங்கள், ரிஷப் பாண்ட் 13 ஓட்டங்கள் மற்றும் குர்னால் பாண்டியா 4 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க இந்திய அணி 4 விக்கட்டுகளை இழந்து 458 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதேவேளை நேற்றைய போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.4 ஓவர்களில் வெறும் 177 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 281 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
இந்திய அணி பெற்றுக்கொண்ட இந்த ஓட்ட எண்ணிக்கையானது லிஸ்ட் ஏ போட்டிகளில் பெறப்பட்ட மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் முதலிடத்தை இங்கிலாந்தின் சர்ரே அணி தக்கவைத்துள்ளது. இந்த அணி கடந்த 2007ம் ஆண்டு கிளோசெஸ்டர்சையர் அணிக்கெதிரான போட்டியில் 4 விக்கட்டுகளை இழந்து 496 ஓட்டங்களை குவித்துள்ளது.
No comments:
Post a Comment