சர்வதேச டி20 போட்டியில் அதிக ஓட்டங்களை விளாசி ஆரோன் பின்ச் சாதனை - vistharaya

Breaking

Sunday, July 8, 2018

சர்வதேச டி20 போட்டியில் அதிக ஓட்டங்களை விளாசி ஆரோன் பின்ச் சாதனை


அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஆரோன் பின்ச் டி20 போட்டியில் 172 ஓட்டங்களை விளாசி புதிய சாதனையை படைத்துள்ளார்.
சிம்பாப்வே அணிக்கெதிராக தற்போது நடைபெற்று வரும் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 227 ஓட்டங்களை குவித்துள்ளது.
இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஆரோன் பின்ச் மற்றும் ஷோர்ட் ஆகியோர் 223 ஓட்டங்களை இணைப்பாட்டமாக குவித்தும் சாதனைப்படைத்துள்ளனர்.
சர்வதேச டி20 போட்டிகளில் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில், ஆரோன் பின்ச் 156 ஓட்டங்களை விளாசி 2013ம் ஆண்டு சாதனைப்படைத்திருந்தார்.
தற்போது இந்த சாதனையை பின்ச் இன்று முறியடித்துள்ளார். இவர் 76 பந்துகளை எதிர்கொண்டு, 10 சிக்ஸர்கள் மற்றும் 16 பவுண்டரிகள் அடங்கலாக 172 ஓட்டங்களை குவித்தார்.
எனினும் டி20 போட்டிகளில் கிரிஸ் கெயில் பெற்றிருந்த 175 ஓட்ட எண்ணிக்கையை மயிரிழையில் ஆரோன் பின்ச் தவறவிட்டுள்ளார். கிரிஸ் கெயில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பூனே வொரியஸ் அணிக்கெதிரான போட்டியில் 175 ஓட்டங்களை விளாசி சாதனைப்படைத்திருந்தார். ஆனால் இந்த சாதனையை பின்ச் 3 ஓட்டங்களால் தவறவிட்டுள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலிய அணி சர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய இணைப்பாட்ட சாதனையையும் முறியடித்துள்ளது.
ஆரோன் பின்ச் மற்றும் ஷோர்ட் ஆகியோர் இணைந்து முதல் விக்கட்டுக்காக 223 ஓட்டங்களை விளாசி சாதனைப்படைத்துள்ளனர். இதற்கு முன்னர் நியூஸிலாந்தின் மார்டின் குப்டில் மற்றும் வில்லியம்ஸன் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கெதிராக பெற்ற 171 ஓட்டங்களே சாதனையாக இருந்தது.

No comments:

Post a Comment