சர்வதேச கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ள டி20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையின் முன்னணி இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இன்று வெளியிடப்பட்டுள்ள டி20 பந்து வீச்சாளர்களின் பட்டியலில் முதல் 9 இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் தக்கவைத்துள்ளனர். அதுமாத்திரமின்றி, பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் அணியின் முஜிபூர் ரஹ்மான் மற்றும் மொஹமட் நபி ஆகியோரும் பந்து வீச்சு பட்டியலில் முன்னேறியுள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை தொடர்ந்தும் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான் தக்கவைத்துள்ளதுடன், இரண்டாம் இடத்தை பாகிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் பிடித்துள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சஹால், நான்காவது இடத்தில் இஸ் சோதி, ஐந்தாவது இடத்தில் செமியல் பத்ரி, ஆறாவது இடத்தில் மிச்சல் சென்ட்னர், ஏழாவது இடத்தில் இம்ரான் தாஹீர் மற்றும் எட்டாவது இடத்தை ஆப்கானிஸ்தான் அணியின் மொஹமட் நபி 11 இடங்கள் முன்னேறி பிடித்துள்ளார்.
தொடர்ந்து ஒன்பதாம் இடத்தை இமாட் வசீம் பிடித்துக்கொள்ள, பத்தாவது இடத்தை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா பிடித்துள்ளார்.
இதேவேளை இந்திய அணியின் புவனேஷ்வர்குமார் 20வது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி 19ம் இடத்தை பிடித்துள்ளார்.
துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில்,எவின் லிவிஸ் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இலங்கை அணியின் குசல் பெரேரா 19வது இடத்திலிருந்து 18வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவரை தொடர்ந்து டு பிளசிஸ் 19வது இடத்தையும் டேவிட் வோர்னர் 20வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அத்துடன் உலக பதினொருவர் அணியில் விளையாடிய இலங்கை அணியின் திசர பெரேரா துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் 38வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
No comments:
Post a Comment