இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன, இம்மாதம் நடைபெறவுள்ள நெதர்லாந்து மற்றும் நேபாள அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ம் திகதி நேபாளம் நெதர்லாந்து மற்றும் எம்.சி.சி அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் மஹேல ஜயவர்தன எம்.சி.சி கழகத்தின் அணித்தலைவராக செயற்படவுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மஹேல ஜயவர்தனவுடன் ஸ்கொட்லாந்து வீரர்களான டெய்லன் பட்ஜ், எலெஸ்டையர் எவன்ஸ், மார்க் வெட் ஆகியோரும் எம்.சி.சி அணியில் விளையாடவுள்ளனர்.
இதேவேளை எம்.சி.சி. அணியின் ஏனைய வீரர்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹேல ஜயவர்தனவுக்கு கடந்த 2015ம் ஆண்டு எம்.சி.சி கழகம் கௌரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதன் பின்னர் இவர் 2017ம் ஆண்டு வெளிநாட்டு வீரர் அங்கீரம் இன்றி நெட்வெஷ்ட் டி20 தொடரில் லங்காஷயர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதுமாத்திரமின்றி கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் மற்றும் சமரெஷ்ட் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
தற்போது மஹேல ஜயவர்தன இந்திய பிரீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment